ராஜீவ் கொலையில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
திருச்சியில் ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது நிச்சயம் என்று கூறிய அவர், மருத்துவமனை அமையும் இடம் குறித்து மத்திய சுகாதாரக் குழு அறிவிக்கும் என்றும் தெரிவித்தார். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இதுதொடர்பாக நடப்பு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவும் அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன.