மரபணு சார்ந்த அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆறு வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மூலம் நடக்க வைத்துள்ளனர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள்.
இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் ஜெயந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரிட்டில் போன் எனப்படும் எலும்பு இறுக்க நோயானது மரபணு சார்ந்த ஒன்றாகும். 10 ஆயிரத்தில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கும், பிறவியிலேயே மரபணு குறைபாடுள்ள பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கும் ஏற்படுவது உண்டு.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் உறுதித்தன்மையை இழந்து எளிதில் வளையவோ அல்லது உடையவோ கூடும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பிறரை போல எளிதில் நடக்க முடியாது. அதனை குணப்படுத்த உயர் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.
சென்னை கொளத்தூரை சேர்ந்த 6 வயது சிறுவன் சரவணனுக்கு அந்த பாதிப்பு இருந்தது. பிறப்பிலேயே அது கண்டறியப்பட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
முதல் 5 ஆண்டுகளுக்கு மருந்துகள், மாத்திரைகள் மூலமாக எலும்புகள் வலுவாக்கப்பட்டன. இதனிடையே இருமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கால்களில் கம்பிகள் பொருத்தப்பட்டு எலும்புகள் நேராக்கப்பட்டன. அத்துடன் பல்வேறு பயிற்சிகளும் அந்தச் சிறுவனுக்கு வழங்கப்பட்டன. அதன் பயனாக தற்போது எந்த துணையும் இல்லாமல் தாமாகவே அவர் நடக்கிறார். இதுபோன்ற சிகிச்சைகளுக்கு ஏறத்தாழ ரூ. 10 லட்சம் வரை செலவாகும். ஆனால் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அந்த சிகிச்சைகள் அச்சிறுவனுக்கு இலவசமாக வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.