தமிழ்நாடு

ராஜீவ் வழக்கு - மீண்டும் குழப்புகிறதா உச்சநீதிமன்ற தீர்ப்பு?

ராஜீவ் வழக்கு - மீண்டும் குழப்புகிறதா உச்சநீதிமன்ற தீர்ப்பு?

rajakannan

மிகவும் பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் ஏழு பேரின் விடுதலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சரவை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு என்ன வலிமை இருக்கிறது? தீர்மானம் குறித்து ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்பது தொடர்பான சட்ட வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

பேரறிவாளன் கருணை மனு

கடந்த 2015-ம் ஆண்டு தமிழக ஆளுநரிடம் தங்களை விடுவிக்க கோரி பேரறிவாளன் தரப்பில் கருணை மனு போடப்பட்டது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இடையேயான மோதல் உச்சநீதிமன்றம் சென்றதால் ஆளுநர் அதனை பரிசீலிக்காமல் விட்டு விட்டார்.  பின்னர், அரசுகளின் அதிகார மோதலில் சில விஷயங்கள் உச்சநீதிமன்றம் மூலம் தெளிவாக்கப்பட்டது. 

குற்றவாளிகள் தண்டனை குறைப்பில் முடிவெடுக்க மத்திய அரசு, மாநில அரசு, ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு சிறப்பு அதிகாரம் உண்டு. சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசுதான் தண்டனை குறிப்பை செய்ய முடியும். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒரு இடத்தில் அதிகபட்ச அதிகார மோதல் ஏற்பட்டால் அங்கு மத்திய அரசின் அதிகாரமே செல்லும். மத்திய அரசின் சட்டங்கள் இடம்பெற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு குறித்து மாநில அரசு முடிவெடுக்க மத்திய அரசின் ஒப்புதல் தேவை.

இப்படி பலவிதமான விளக்கங்களை உச்சநீதிமன்றம் சொல்லியது. இந்நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றம் அது தொடர்பான வழக்கில் கொடுத்த விளக்கமே இப்போது பிரச்னை ஆகி நிற்கிறது. 

2015 டிசம்பர் 30-ல் பேரறிவாளன் ஆளுநரிடம் கொடுத்த மனுவை, ஆளுநரே முடிவு எடுக்கலாம், எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியது. 

சரி, ஆளுநர் முடிவு எடுப்பதில் என்ன பிரச்னை? 

ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் கருத்தை கேட்டு எந்த முடிவையும் எடுப்பவர், அமைச்சரவை ஆலோசனைப்படி செயல்படுவர் (கருணை மனு உட்பட) ஆனால் அது கட்டாயமல்ல.

கடந்த 2000-ம் ஆண்டில் அப்போதைய தமிழக அரசின் முடிவுப்படி ஆளுநர் நளினியின் தண்டனையை ஆயுளாக குறைத்தார், அதனால் இப்போது தமிழக அரசும் அதே போல் செய்தால் நடக்கும் என்கின்றனர் பலர். ஆனால் சிக்கல் 2000-ம் ஆண்டுக்கு பின்னரே ஏற்பட்டது. மாநில அரசுக்கு அதிகாரமே இல்லை என உச்சநீதிமன்றம் கூறியது இப்போதுதான் நடந்தது. ராஜிவ் வழக்கில் உரிய அரசு என்ற அங்கீகாரம் மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டதும் இப்போதுதான் நடந்தது. 

இங்கு ஆளுநர் கண்டிப்பாக சட்ட ஆலோசனையோ, அமைச்சரவை ஆலோசனையோ கேட்பார். அது யார் ? யாரிடம் கேட்க வேண்டும்? என சட்டம் கூறுகிறது ? சரியான அரசு யார் ? என எந்த விளக்கமும் இல்லாமல் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கொடுத்த அதீத அதிகரத்தை அவரது உரிமை என்று மட்டும் சொல்லி தனது வழக்கை முடித்துக் கொண்டது. இப்போது மீண்டும் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. விடுதலை தாமதம் ஆகும் என்றே சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.