தமிழ்நாடு

ரஜினியின் வருகை அரசியல் களத்திலே மாற்றங்களை உருவாக்கும் - செ.கு.தமிழரசன் பேட்டி

kaleelrahman

ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பு குறித்து இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார் அப்போது...

தமிழகத்திலே எம்.ஜி.ஆர் உடைய அரசியல் செல்வாக்கு, திரைப்பட செல்வாக்கு எப்படி இருந்ததோ அதேபோல அவருக்குப்பிறகு தமிழகத்தில் உள்ள பட்டிதொட்டிகள் எல்லாம் சாதாரண குழந்தைகள் முதல் முதியவர்வரை அனைவருக்கும் அறிமுகமான ஒரு திரைப்பட கலைஞராக அடிதட்டு கிராம மக்களிடையே செல்வாக்கு பெற்றவர் ரஜினி.

கடந்த 2017-லேயே அரசியல் கட்சி தொடங்க வேண்டும் அது மாறுதலை ஏற்படுத்தும் அரசியலாக இருக்கும் என அறிவித்தார். அந்த நிலையிலே வரும் ஜனவரியில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்றுதான். நிச்சயம் தமிழகத்திலே அவருடைய அரசியல் முயற்சி என்பது அரசியல் களத்திலே மாறுதல்களை மாற்றங்களை தாக்கங்களை கட்டாயம் உருவாக்கும் என்றவரிடம்.

தமிழகத்தில் ஆன்மிக அரசியலுக்கு வாக்குவங்கி இருக்கிறதா என்ற கேள்விக்கு, ஆன்மிக அரசியல் என்பது நாம் பார்க்கின்ற பார்வையை பொறுத்து இருக்கு. மதசார்பற்ற தன்மை என்பது எந்த மதத்தையும் சாராதது அல்ல. தான் சார்ந்திருக்கிற மதத்தை போலவே பிற மதங்களுடைய உணர்வுகளை காப்பாற்றுவது மதிப்பதும் அதிலே மோசடித்தனம் இல்லாமல் இருப்பதும்தான் ஆன்மிக அரசியல் என்றால் அது பாராட்டுக்கு உரியதுதானே என்றார்.