மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் நாளை மீண்டும் சந்திக்க உள்ளார்.
கடந்த வாரம் சென்னையில், ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர் கூட்டத்தில் 36 மாவட்டங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், ரஜினியின் அரசியல் வருகை, மாவட்ட செயலாளர்களின் பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக சொல்லப்பட்டது.
அப்போது, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்பது உண்மையல்ல என நிர்வாகிகளிடையே அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகின. மேலும், அக்கூட்டத்தின் முடிவில், ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றமென ரஜினி கருத்து கூறியிருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் நாளை மீண்டும் சந்திக்க உள்ளார். சென்னையில் உள்ள ராகவேந்திர மண்டபத்தில் நாளை காலை எட்டு மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு நுழைவதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் அவர் விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.