தமிழ்நாடு

தமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் - ரஜினியின் திட்டம்?

தமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் - ரஜினியின் திட்டம்?

jagadeesh

நடிகர் ரஜினிகாந்த் வருகிற ஏப்ரல் மாதத்தில் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய கட்சி தொடங்க உள்ளதாக கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அறிவித்த நடிகர்‌ ரஜினிகாந்த், ஆன்மிக அரசியல்தான் தனது பாதை என்றும் தெரிவித்து இருந்தார். அறிவிப்பு வெளியிட்டு இரண்டு வருடங்கள் ஆனதாலும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ளதாலும் ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்த செய்திகள் தற்போது வெளியாகி வருகிறது.

இந்நிலையில், வருகிற ஏ‌ப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு தின‌த்திற்குப் பின்னர் புதிய ‌‌கட்சி‌ பற்றிய அ‌றிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்‌றன.

கட்சியின் பெயர் இது‌வரை இறுதி செய்யப்படவில்லை என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியுள்ளதாக பேசப்படுகின்றது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், செப்டம்பர் மாதம் முதல் நடிகர் ரஜினி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் கொள்கை மற்றும் திட்டங்களை மக்களிடம் விளக்கி கூற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014ஆம் ஆண்டு தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமைத்தது போல், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் மெகா கூட்டணியை உருவாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்தால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்பதில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியுடன் இருப்பதாகவும், பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து அவரே இறுதி முடிவு எடுப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.