சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி நடத்தும் பள்ளி கட்டடத்திற்கு வாடகை தராததால் பள்ளி இழுத்து மூடப்பட்டது.
கிண்டி ரேஸ் கோர்சில் ரஜினிகாந்தின் மனைவி லதா தலைமையில் ஆஸ்ரம் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளி செயல்பட்டு வரும் கட்டடத்திற்கு, லதா ரஜினிகாந்த் வாடகை பாக்கி கொடுக்காததால், அதன் உரிமையாளர் வெங்கடேஷ்வரலு நுழைவாயிலை பூட்டியுள்ளார். பல மாதங்களாக வாடகை தராததால் வெங்கடேஷ்வரலு நீதிமன்றத்தை நாடியதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு 2 கோடி ரூபாய் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இதுவரை பணத்தை தராததால், பள்ளியின் நுழைவாயிலை இன்று பூட்டியதாக வெங்கடேஷ்வரலு தெரிவித்தார். அதனையடுத்து வேளச்சேரியிலுள்ள ஆஸ்ரம் பள்ளிக்கு கிண்டி பள்ளி மாணவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர். இதனிடையே, பள்ளியின் சாவி தொலைந்துவிட்டதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டடம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரச்னை தொடர்பான முழுமையான விளக்கத்தை வெளியிடும்வரை காத்திருக்குமாறும் ஆஸ்ரம் பள்ளி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆஸ்ரம் பள்ளி ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியம் கொடுப்பதில்லை என புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.