கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலை இழந்து தவிக்கும் பெஃப்சி தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் நிதியளித்து உதவியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆகவே இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் நடமாட தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக திரைத்துறையில் நடைபெற்று வந்த அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. இந்த மாத இறுதிவரை இந்த வேலை நிறுத்தம் நீடிக்கும் என பெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த வேலை நிறுத்தத்தினால் திரைத்துறையில் தினக் கூலிகளாக பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் பணியை இழந்து சிக்கித் தவிக்கின்றனர்.
இதனிடையே திரைப்படத் துறையில் தினக்கூலியாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வாழ்வைக் காப்பதற்காக, ஃபெஃப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிதி உதவி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனையடுத்து சிவக்குமார், சூர்யா, கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நன்கொடை அளித்திருந்தனர்.
சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து ரூ.10 லட்சம் நன்கொடை அளித்தனர். அதன்பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனும் பெஃப்சி உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை அளித்தார். இதைத் தொடர்ந்து, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், மனோ பாலா ஆகியோரும் முறையே 250 கிலோ எடையுள்ள 10 மூட்டை அரிசியை வழங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியளித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது ஆர்.கே.செல்வமணி கேட்டிருந்த நிதியில் 25 சதவீத தொகையாகும். மேலும், நடிகர் விஜய் சேதுபதி, தன் பங்கு தொகையாக ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த', அஜித்தின் ‘வலிமை’, சிம்புவின் ‘மாநாடு’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.