தமிழ்நாடு

ரஜினி வீடு முன்பு கூடும் ரசிகர்கள்... பரபரக்கும் போயஸ் கார்டன்..!

webteam

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தது உள்ளிட்ட காரணங்களால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், மக்களை தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப் போவதாக சமூகவலைதளங்களில் ரஜினி பெயரில் ஓர் அறிக்கை வெளியானது. சூழலை கருத்தில் கொண்டு ரசிகர்களும் மக்களும் என்ன முடிவு எடுக்க சொன்னாலும் அதனை ஏற்பேன் என ரஜினிகாந்த் கூறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இச்சூழலில் ட்விட்டரில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்ட ரஜினிகாந்த், சமூக ஊடங்களில் வெளியான அறிக்கை தன்னுடையது அல்ல என்பது அனைவருக்கும் தெரியும் என கூறியிருந்தார். எனினும் அதில் வந்திருக்கும் தன்னுடைய உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மையே என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.இதை பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் வகையில் சென்னை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் "நீங்கள் வாருங்கள் ரஜினி! எங்கள் ஆதரவு உங்களுக்கு தான்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் மயிலாடுதுறையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் "அரசியல் மாற்றம். ஆட்சி மாற்றம். விவசாயிகளின் துயர் துடைக்க வா தலைவா வா." என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு எதிரே ரசிகர்கள் வந்தவண்ணம் உள்ளனர். ரஜினிகாந்த் புகைப்படம் பொறித்த டி சர்ட், ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் என்ற வாசக உடைகளையும் ரசிகர்கள் அணிந்து வந்திருந்தனர். ரஜினி பெயரில் பரவிய அறிக்கை, அதற்கு ரஜினி கொடுத்த விளக்கம், அரசியல் போஸ்டர்கள் என ரஜினிகாந்தை சுற்றி இரு தினங்களாக அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது