அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என நடிகர்
ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
தமிழகத்தை பொருத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்கள், திரையரங்குகள், பெரிய கடைகள் போன்றவைகளை மூடக்கோரி
அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் மிகப்பெரிய பாதிப்பு தடுக்கப்படும் என்ற போதிலும் இத்தகையை இடங்களில் வேலை பார்த்து வரும் ஊழியர்கள்
தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட் விட்டர்
பக்கத்தில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு
சேர்ந்து நாமும் இணைந்து கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது
பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்” எனத் தெரிவித்துள்ளார்.