தமிழ்நாடு

“ரெண்டு வீடியோ போதும் தலைவா.. அடிச்சு தூள் கெளப்பிடுவோம்” போயஸ் கார்டனில் ரஜினி ரசிகர்கள்

“ரெண்டு வீடியோ போதும் தலைவா.. அடிச்சு தூள் கெளப்பிடுவோம்” போயஸ் கார்டனில் ரஜினி ரசிகர்கள்

sharpana

’கட்சி தொடங்கவில்லை’ என்று நடிகர் ரஜினியின் அறிவிப்பைத் தொடர்ந்து அவர் ‘கட்சி தொடங்கவேண்டும்; அரசியலுக்கு வரவேண்டும்’ என்று இன்றும் அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டன் இல்லம் அருகில் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

கட்சி தொடங்கவில்லை என்று நேற்று அறிவித்த நிலையில் ’களப்பணியாற்ற தாங்கள் இருப்பதாகவும் ரஜினி அரசியலுக்கு ’என்றும் ரசிகர்கள் போயஸ் கார்டனில் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். ரசிகர்கள் வருகை அதிகரித்திருப்பதால் போயஸ்கார்டன் இல்லத்தில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்ட போயஸ்கார்டன் சாலையின் நுழைவு வாயிலிலேயே ரசிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பேசும்போது,

   “எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. வீட்டில் இருந்துகொண்டே பிரச்சாரம் செய்யலாம். தலைவரின் ஒரு இரண்டு நிமிட வீடியோ இருந்தாலே போதும். 234 தொகுதிகளையும் அடித்துத் தூக்கும் தில்லு எங்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உண்டு. அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்”. என்கிறார்.

மற்றொரு மன்ற நிர்வாகி பேசும்போது,   “பூத் கமிட்டி மெம்பர்ஸ் ஒரு வீட்டிற்கு சென்றால் 25 போட்டோக்கள் கொடுக்கிறார்கள். தெருவே போட்டோ எடுத்து வந்து கொடுக்கிறார்கள். அதனால், தலைவர் கண்டிப்பாக மனதை மாற்றிக்கொண்டு அரசியலுக்கு வரவேண்டும். அவர், வந்தால் எல்லா வேலைகளையும் பார்க்க மக்கள் மன்றம் உறுதுணையாக இருக்கும்” என்கிறார் உற்சாகமுடன்

”தலைவர் நிச்சயம் வருவார். எம்.ஜி.ஆர் படுத்துக்கொண்டே ஜெயித்தார். என் தலைவர் வீட்டில் இருந்து பிரச்சாரம் செய்தே ஜெயிப்பார். ரசிகர்களுக்காக கேட்கவில்லை. மக்களுக்காகத்தான் கேட்கிறோம்” என்று ரஜினி அரசியலுக்கு வர கோரிக்கை வைக்கிறார், மற்றொரு நிர்வாகி.