அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது
கடந்த 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. அப்போது அங்கு அறிஞர் அண்ணா சிலையை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இதனையடுத்து கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. அதன்படி அங்கு இருந்த அண்ணா சிலை சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த சிலையை புனரமைக்கும் வேலை நடந்து வந்தது.
புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கருணாநிதி சிலையும் அண்ணா அறிவாலயத்தில் ஒரே இடத்தில், நாளை திறக்கப்படும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அகில இந்திய தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்கள் என திமுக தெரிவித்தது. இந்நிலையில், கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் திறப்பு விழாவில் பங்கேற்க சென்னைக்கு வரும் சோனியா காந்தி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோரும் நாளை நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.