தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நேரில் ஆஜராக ரஜினிக்கு விலக்கு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நேரில் ஆஜராக ரஜினிக்கு விலக்கு

webteam

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்த் நேரில் ஆஜராக விலக்கு கேட்ட நிலையில் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் இந்த சம்பவம் தொடர்பாக பலரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், போராட்டத்தில் விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் புகுந்தனர். தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் இதுதான் நடைபெற்றது எனத் தெரிவித்திருந்தார்.

இதனால் விசாரணை ஆணையம் ரஜினிகாந்தை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 25-ஆம் தேதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்தார். அதில், “ஆஜராகும்போது ரசிகர்கள் அதிக அளவில் கூடினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் பதில் தரத் தயார்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஜினிக்கு பதிலாக இளம்பாரதி உட்பட மூன்று வழக்கறிஞர்கள் இன்று ஆணையம் முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டது ஏற்கப்பட்டுள்ளதாகவும், ரஜினிகாந்திடம் கேட்கப்படக் கூடிய கேள்விகள் அடங்கிய சீலிடப்பட்ட கவரை ஆணையம் வழங்கி உள்ளதாகவும் ரஜினியின் வழக்கறிஞர் இளம்பாரதி தெரிவித்தார்.