ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினி நாளை நேரடியாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிய பாதுகாப்பு வழங்க கோரி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இறுதியாக நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அதன்பின்னர்தான் தனது அரசியல் நிலைப்பாட்டை கூறியிருந்தார். அதாவது மக்களிடையே எழுச்சி வரவேண்டும். அவ்வாறு வந்தால் அரசியலுக்கு வருவேன் எனத் தெரிவித்திருந்தார்.
இதன்பின்னர் கொரோனா பேரிடர் ஏற்பட்டதால் பொதுநிகழ்வில் கலந்துகொள்ளாமல் ரஜினிகாந்த் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் 8 மாதங்கள் கழித்து, நாளை ராகவேந்திரா மண்டபத்தில் அல்லது தனது வீட்டில் நிர்வாகிகளை நேரடியாக சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் எனவும் அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே உரிய பாதுகாப்பு வழங்க கோரி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.