ராஜேந்திர பாலாஜி, விஜய் எக்ஸ்
தமிழ்நாடு

தவெக-வை திமுக அழித்து விடும்| விஜய் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்.. ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் திமுக தவெக-வை அழைத்துவிடும் என்று விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

PT WEB

திமுகவை விஜய் எதிர்ப்பது உண்மையாக இருந்தால், எடப்பாடி தலைமையில் இருக்கும் அதிமுக கூட்டணியில் வந்து சேருமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சௌந்தரபாண்டியனார் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடார் மகாஜன சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு முகாமை துவங்கி வைத்து ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

ராஜேந்திர பாலாஜி

பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், டிசம்பர் மாதத்திற்கு பின்பு அதிமுக அலை உருவாகும். அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அமர்வது உறுதி. ஓபிஎஸ், டிடிவி இணைப்பு சம்பந்தமாக எந்த முடவாக இருந்தாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் எடுப்பார். அதிகாரம் கண்ணை மறைக்கின்ற வார்த்தைகளை விடுகின்ற இன்றைய திமுக தலைவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு பாடமாக அமையும் என்று கூறினார். தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பாதயாத்திரை அதிமுக கூட்டணிக்கு வலுசேர்க்கும் என தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் குறித்தான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அவர், விஜய்க்கு என்று ஒரு கூட்டம் கூடுவது உண்மை தான். ஆனால், அந்த கூட்டம் ஓட்டாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. விஜய்க்கு கூடும் கூட்டத்தை விட நடிகர் அஜித் வந்தால் இரண்டு மடங்கு கூட்டம் கூடும். விஜய் தனித்து நின்று ஜெயிப்போம் என்று கூறுவது இந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் நடைபெறாத ஆசை என்று கூறிய அவர், விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்று சொன்னால் எடப்பாடியார் தலைமையில் இருக்கின்ற அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் இல்லையென்றால் இந்த தேர்தலோடு விஜயை தி.மு.க முடித்து விடும். எனவே, விஜய் அவர்கள் நன்றாக யோசித்து அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்று கூறினார்.