தமிழ்நாடு

இராஜேந்திரசோழன் பிறந்த தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்து கொண்டாட வேண்டும்: சீமான்

இராஜேந்திரசோழன் பிறந்த தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்து கொண்டாட வேண்டும்: சீமான்

Veeramani

தமிழ்ப்பேரரசன் இராஜேந்திரச்சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளினை அரசு விடுமுறை நாளாக அறிவித்து, தமிழினத்தின் ஒப்பற்ற பெருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட, தமிழ்நாடு அரசு வழிவகைச் செய்யவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார்

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தன் ஆளுமைத்திறனால், பல்லாயிரம் யானைகள் ஏற்றும் அளவிற்கு மரக்கலங்கள் பல கட்டி கடலை கடந்து, தன் வீர மறத்தால் உலகை புலிக்கொடியின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ்ப்பேரரசன் எங்கள் பாட்டன் அரசேந்திர சோழன் எனும் இராஜேந்திர சோழன்.

கிபி 1014 முதல் கிபி 1044 வரையிலான அவரது பொற்கால ஆட்சியில், தற்போதைய இந்தியப் பெருநிலத்தில் மத்திய பிரதேசம் சட்டீஸ்கர், ஒரிசா வரை இருந்த எண்ணற்ற தேசங்கள், மலேயா, சிங்கப்பூர் சுமத்ரா தீவுகள், கம்போடியா இந்தோனேசியா என தென் கிழக்கு ஆசியா முழுவதும் சோழப் பேரரசை விரியச் செய்து, தெற்காசியப் பெருங்கண்டத்திலேயே அதிகப் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பினை வென்றெடுத்து, ஆண்ட மாமன்னராகத் திகழ்ந்தவர் நம் பாட்டன் அரசேந்திர சோழன்.

அலைகடல் மீது படைபல நடத்தி, கங்கையும், கலிங்கமும், கடாரமும், இலங்கையும் வென்று, பாயும் புலிக்கொடி பட்டொளி வீசி பறந்திட, தென் கிழக்காசியா முழுமையும் சோழப்பேரரசின் வெண்கொற்றக்குடையின்கீழ் கொண்டுவந்து, உலகின் நான்காவது பெரும் பேரரசை நிறுவிய தமிழ்ப்பெரும்பாட்டன் மாமன்னன் அரசேந்திரச்சோழனின் பிறந்தநாளில், அவரது பெரும்புகழைப் போற்றி வணங்குவதில் பெருமிதமும், பேருவுவகையுமடைகிறோம். தமிழ்ப்பேரரசன் அரசேந்திரச்சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளினை அரசு விடுமுறை நாளாக அறிவித்து, தமிழினத்தின் ஒப்பற்ற பெருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட வழிவகைச் செய்ய தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருக்கிறார்