தமிழ்நாட்டின் முதல் பேரரசை உருவாக்கியவர் ராஜராஜன் என்றால், அதைக் கடல் கடந்த மாபெரும் வல்லரசாக விரிவுபடுத்தியவர் அவர் மகன் ராஜேந்திரன். தன்னுடைய தந்தைக்கு ஏற்ற தளபதியாகச் செயல்பட்டவர் ராஜராஜன். மகனையும் அப்படித்தான் அவர் வளர்த்தெடுத்தார். விளைவாக, ராஜராஜன் ஆட்சிக் காலத்தில் சுமார் 30 ஆண்டு காலம் பட்டத்து இளவரசராக இருந்து ஆட்சி நிர்வாகத்தில் உதவி புரிந்தவர் ராஜேந்திரன். ராஜராஜன் காலத்தில் நடந்த முக்கிய போர்கள் பலவற்றிலும் ராஜேந்திரனுக்குப் பெரும் பங்கிருந்தது. ஒரு பேரரசை ஆள்வதற்கான எல்லா அனுபவங்களிலும் மகனை ஈடுபடுத்திய ராஜராஜன், நல்ல உடல்நிலையில் இருக்கும்போதே மகனுக்குப் பட்டம் சூட்டினார்.
இன்றைய தமிழ்நாட்டு வரைபடத்தில் உள்ள அத்தனை பகுதிகளையும் இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவந்ததோடு, தென்னகத்தின் கணிசமான பகுதிகளையும், பெரும்பான்மை இலங்கையையும் சோழப் பேரரசின் கீழ் கொண்டுவந்தார் ராஜராஜன்... சோழ அரசின் அதிகார எல்லையை கங்கை வரை விரிவுபடுத்தியதோடு, தமிழர்களின் வணிக எல்லையைத் தென் கிழக்கு ஆசியா வரை விரித்தார் ராஜேந்திரன். இன்றைய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா - தெலங்கானா, கர்நாடகா என்று தென்னகத்தின் பெரும் பகுதியோடு, சத்தீஸ்கர், ஒடிஷா, வங்கம், மத்திய பிரதேசம், மராட்டியம் என்று கங்கை சமவெளி வரை நீண்டது ராஜேந்திரனின் அதிகாரம்.
இவற்றில் சில பகுதிகளை நேரடியாக ஆண்ட ராஜேந்திரன், சில பகுதிகளில் வரி வசூல் அதிகாரம், சில பகுதிகளில் வணிக பாதைகளில் அதிகாரம் என்று மிகுந்த ராஜதந்திரத்தோடு, தன்னுடைய தந்தை ராஜராஜன் வகுத்த பார்வையில் அரசின் செல்வாக்கை விஸ்தரித்துக்கொண்டே சென்றார். கிழக்கு கடற்கரையில் தமிழகம் முதல் வங்கம் வரையிலான கடற்கரையில் சோழர்கள் ஆதிக்கம் செலுத்தியதால்தான், பிற்காலத்தில் இந்த கடற்கரைக்கு சோழ மண்டலக் கடற்கரை என்று பெயர் சூட்டினார்கள் ஐரோப்பியர்கள். ராஜேந்திரனின் சிறப்புக்கெல்லாம் மகுடம்போலத் திகழ்வது அவரது வடதிசை வெற்றிகள்தான். வடக்கை வென்ற முதல் தமிழ் பேரரசனான ராஜேந்திரன், ‘கங்கைகொண்டான்’, ‘கடாரம்கொண்டான்’ என்று போற்றப்பட்டார்.
வடக்கும் இன்று, நேற்று கதை அல்ல. சோழர் காலத்திலும் அது இருந்தது. தமிழர்கள் நினைத்தால், எப்போதும் வடக்கை வெல்ல முடியும்; எந்த எல்லைக்கும் சென்று கொடி நாட்ட முடியும் என்று நிரூபித்தவர் ராஜேந்திரன். இந்த வரலாற்றை காலமெல்லாம் வரலாற்றில் பதித்துவைக்க எண்ணினார் ராஜேந்திரன். அதற்கான வாய்ப்பாக புதிய தலைநகர உருவாக்கத்தை அவர் பயன்படுத்தினார். ராஜராஜனுக்குப் பிடித்த நகரம் தஞ்சாவூர். ஆனால், தந்தையின் காலத்துக்குப் பின் சோழர் ஆட்சியின் அதிகாரத்தை விஸ்தரித்ததால், விரிந்துகொண்டே சென்ற ராணுவத்தின் தேவைக்கேற்ப தன்னுடைய கனவுப்படி ஒரு புதிய தலைநகரத்தைக் கட்டமைத்தார் ராஜேந்திரன்.
அதற்குத்தான் கங்கைகொண்ட சோழபுரம் என்று பெயரிட்டார். தமிழர் புகழை உலகுக்கு பிரகடனப்படுத்தும் செல்வாக்கு மிக்க நகரமாக, ஆசியாவின் செல்வாக்கு மிக்க அதிகார நகரங்களில் ஒன்றாக, சோழர்களின் வீழ்ச்சி வரை அடுத்த 250 ஆண்டுகளுக்குத நீடித்தது கங்கைகொண்ட சோழபுரம்! ஆனால், எப்போதும் தந்தையை சிந்தித்து செயலாற்றியவர் ராஜேந்திரன். தஞ்சையில் தந்தை கட்டிய பெரிய கோயிலின் விமான உயரம் 216 அடி என்றால், மகன் இங்கே கட்டிய கங்கைகொண்ட சோழீச்சரம் கோயிலின் விமான உயரம் 167 அடிதான் என்பது ஓர் உதாரணம். ஆயிரம் ஆண்டுகள் கடந்து பேசப்படும் ராஜேந்திரனின் புகழ் நாட்டை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற வரலாற்றை மட்டும் நமக்குச் சொல்லவில்லை; வீட்டை எப்படி கட்டமைக்க வேண்டும் என்ற தமிழ் மரபையும் சொல்கிறது!