கே.டி. ராஜேந்திரபாலாஜி, எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவராக இருப்பார் என கூறினார். அதிமுக தனித்து ஆட்சி அமைத்து, பாஜக ஆதரவுடன் 220க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும். திமுக ஆட்சியை விரட்ட அதிமுக பொதுச் செயலாளர் பல கட்சிகளை ஒன்றிணைப்பார் என அவர் தெரிவித்தார்.
வ.உ.சிதம்பரனாரின் 89 வது நினைவு நாளான நேற்று திருநெல்வேலி வர்த்தக மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுப்பார். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். பாஜக ஆதரவுடன் தோழமைக் கட்சி ஆதரவுடன் மிக பலமான கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு 220க்கும் மேற்பட்ட தொகுதிகளை அதிமுக கைப்பற்றும். சமூக சமுதாய அரசியல் அமைப்புகளும் அதிமுகவை நோக்கி ஆதரவு கொடுத்து படை எடுத்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக பொதுச் செயலாளர் விரும்பினால் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி பேசுவார். திமுகவை ஆட்சியை விட்டு விரட்ட நினைக்கும் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் பணிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்வார். தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக கூட்டணி அமைந்த காலமெல்லாம் உள்ளது. ஜனவரிக்கு பின்னால் விபரீதமான முடிவுகள் எல்லாம் மாறி மாறி எடுக்க வாய்ப்புள்ளது. திமுக வேண்டாம் என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர். அரசியல் தலைவர்களும் திமுக ஆட்சி வேண்டாம்; திமுக ஆட்சியால் யாருக்கும் லாபம் இல்லை விலைவாசி உயர்வு, உட்கட்டமைப்பு போன்றவை சரியில்லாத நிலையில், அரசு செயலிழந்து விட்டது என்பதால் அதிமுக ஆட்சி மீண்டும் வேண்டும் என நினைக்கிறார்கள்.
இந்தியாவின் பலமான பிரதமராக மோடி உள்ளார் பாதுகாப்பான பாரதத்தை உருவாக்கிய பிரதமர் என்ற பெயரை கொண்டவர் மோடி. தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதானமான கட்சியாக அதிமுக உள்ளது. மோடியின் வருகைக்கு வரவேற்பு எதுவாக இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி கண்ணசைவில் நடக்கும். பாஜகவின் தலைமை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மதிக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழகத்தில் எடுக்கும் முடிவு எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுடன்தான் நடக்கும். அதிமுக பரிபூரணமாக எடப்பாடி பழனிசாமி கையில் உள்ளது. திமுகவிற்கு மாற்று அதிமுக தான். தேசத்தை பாதுகாக்கும் பாஜகவோடு தேசத்தின் பக்தரான அதிமுக கூட்டணி வைத்துள்ளது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக கோட்டை ஏறுவார்” என தெரிவித்தார்.