தமிழ்நாடு

கல்லூரிகள், தொழில் நிறுவனங்களை கொரோனா மையங்களாக பயன்படுத்துங்கள்: ராஜீவ் ரஞ்சன்

Sinekadhara

கொரோனா கவனிப்பு மையங்களை பராமரிக்க முதற்கட்டமாக 61 கோடி ரூபாய் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அனைத்து கொரோனா கவனிப்பு மையங்களையும் மாவட்ட ஆட்சியர்கள் செயலாக்கத்துக்கு கொண்டு வருமாறும் தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா கவனிப்பு மையங்களின் எண்ணிக்கையை கடந்த ஆண்டைவிட கூடுதலாக உயர்த்த வேண்டும் எனவும், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர்கள் உரிய முறையை பின்பற்றி பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.


நோய்த் தொற்று ஏற்பட்டவரின் உடன் இருப்பவர்களை 72 மணி நேரத்திற்குள் விரைவாக கண்டறிந்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ள ராஜீவ் ரஞ்சன், அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும், மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள், ஆக்சிஜன் போன்றவற்றை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிட்டார். கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக, ஏப்ரல் 16 முதல் 21 ஆம் தேதி வரை, 11 கோடியே 50 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.