தமிழ்நாடு

`முதல்வரும் நானே, கட்சித்தலைவரும் நானே...’ அசோக் கெலாட் செயல்களால் கலகத்தில் காங். தலைமை!

webteam

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் அடுத்த அரசியல் நகர்வுகளால் காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளசூழலில் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், டெல்லி சென்றுள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சராக உள்ள அசோக் கெலாட்டை காங்கிரஸ் கட்சித்தலைவராக்கிவிட்டு, சச்சின் பைலட்டை முதலமைச்சராக்குவதற்கு காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியாகாந்தி திட்டமிட்டிருந்தார். இதற்காக அசோக் கெலாட்டை டெல்லி வரவழைத்து பேசிய நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி சச்சின் பைலட்டை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைமை மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அஜய் மாக்கன் ஆகியோரை அனுப்பி வைத்திருந்தது.

ஆனால், கூட்டம் நடைபெறாமல் தடுத்த கெலாட்டின் ஆதரவாளர்கள், சச்சின் பைலட் முதலமைச்சராகக் கூடாது என வலியுறுத்தி கிளர்ச்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். கட்சித்தலைமையின் திட்டத்தை தடுத்த அசோக் கெலாட், தந்திரமாக வெளியூர் சென்றுவிட்டு, தனது ஆதரவாளர்கள் மூலம் கட்சித்தலைமையின் திட்டத்தை சிதைத்துவிட்டதாக கார்கே மற்றும் அஜய் மாக்கன் ஆகிய மேலிடத்தலைவர்கள், டெல்லி சென்று சோனியாகாந்தியிடம் தெரிவித்துள்ளனர். இருவரும் ஜெய்ப்பூரில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வ அறிக்கை அளிக்க சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார். 



ஒருவருக்கு ஒரு "பதவி மட்டுமே" என்கிற  விதியிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என விரும்பும் கெலாட்டின் கோரிக்கையை கட்சித்தலைமை ஏற்காததால், தனது ஆதரவாளர்களை  தூண்டிவிட்டு பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டதாக கட்சியின் மூத்தத்தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். இதனால் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே, ராஜஸ்தான் முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட், டெல்லி வந்துள்ளார். அவர், மூத்த காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பார் எனத் தெரிகிறது.

- கணபதி சுப்ரமணியம்