Two wheeler set fire
Two wheeler set fire pt desk
தமிழ்நாடு

"வாங்குன காலத்துல இருந்தே வண்டி ஒழுங்கா ஓடல" - ஆத்திரத்தில் 35 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு!

Kaleel Rahman

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்த பொன்னு பாண்டி மற்றும் பழனி குமார் ஆகிய இருவரும் இணைந்து பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களிடம் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்த சந்தானகுமார் என்பவர் ஒரு பழைய இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.

சந்தானகுமார் இருசக்கர வாகனத்தை வாங்கியதில் இருந்தே அடிக்கடி பழுதானதால் பழனி குமாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் தவணையை கட்டிய சந்தான குமார் கடந்த மாதம் தவணை கட்டவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து மாதத் தவணையை கட்டக் கோரி சந்தானகுமாரை செல்போனில் தொடர்பு கொண்ட பழனி குமார் கேட்டுள்ளார். அதற்கு இருசக்கர வாகனத்தில் பழுது ஏற்பட்டு செலவு அதிகமானதால் தற்போது தவணையை கட்ட இயலாது என்று சந்தானகுமார் தெரிவித்துள்ளார்.

Finance Receipt

இதற்கு வாகனப் பழுதை தன்னிடமே சரி செய்து கொள்ளலாம் எனவும் உடனடியாக தவணையை கட்ட வேண்டும் எனவும் பழனிகுமார் கூறியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் பைனான்ஸ் அலுவலகத்தில் ஏற்கெனவே பணியாற்றிய மதன்குமார் என்பவரை உடன் அழைத்துக் கொண்ட சந்தானகுமார், நேற்றிரவு குடிபோதையில் பழனிகுமார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது பழனிகுமார் வீட்டின் முன்புறம் இருந்த கண்ணாடி ஜன்னல் உள்ளிட்டவைகளை தாக்கி உடைத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட பழனிகுமார் மற்றும் அவரது மனைவியை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்று விட்டனர்.

இச்சம்பவம் குறித்து நேற்றிரவு ஆலங்குளம் காவல் நிலையத்தில் பழனிகுமார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இன்று பழனிகுமார் அலுவலகத்தில் இருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிவதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து பழனிகுமார் அங்கு சென்று பார்த்தபோது அலுவலகத்தின் வெளியே நிறுத்தி வைத்திருந்த 25 வாகனங்கள், உள்ளே நிறுத்தியிருந்த விலையுயர்ந்த பத்து வாகனங்கள் என மொத்தம் 35 வாகனங்கள் எரிந்து சேதமானது.

Two wheeler set fire

இது குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் சந்தானகுமார் மற்றும் மதன்குமார் ஆகிய இருவர் மீது பழனிகுமார் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.