தமிழ்நாடு

கொலை செய்யும் நோக்கில் பேருந்து எரிக்கப்படவில்லை - மூவர் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

கொலை செய்யும் நோக்கில் பேருந்து எரிக்கப்படவில்லை - மூவர் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

webteam

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மூவரும் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மறு ஆய்வு மனு கடந்த 2011- ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட அமர்வு, குற்றவாளிகள் மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை 2016 ஆம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குற்றவாளிகள் நெடுஞ்செழியன், முனியப்பன், ரவீந்திரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையை குறைத்ததோடு, உணர்ச்சிவசப்பட்டு செய்யப்பட்ட தவறு என்பதால் தண்டனை குறைக்கப்பட்டதாகவும், கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்து எரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இப்போது தமிழக ஆளுநரின் பரிந்துரைப்படி அந்த மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் ''மூவரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்தது. மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் தமிழக அரசு விடுதலை செய்யவே பரிந்துரை செய்தது. கொலை செய்யும் நோக்கத்தில் வன்முறையில் ஈடுபடவில்லை என அரசு வழக்கறிஞரும், தலைமை செயலரும் தெரிவித்தனர். இதனையடுத்தே அவர்கள் 3 பேரின் விடுதலைக்கு ஆளுநர் மாளிகை பரிந்துரைத்தது'' என்று தெரிவித்துள்ளது.