விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பள்ளி மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.
அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சிலநாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் நீர்நிலைகள் நிறைந்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தாலும் பொதுமக்கள் பல இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.ரெட்டியாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மழைநீர் சூழ்ந்ததால் பள்ளி மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து குளம்போல் காட்சியளிக்கிறது. தேங்கியுள்ள மழைநீரில் மாணவர்கள் வகுப்பறைக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. மழைநீரில் தேங்கியுள்ளதால் மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல் போன்ற தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.