செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயல், உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆவடி அடுத்த பட்டாபிராம் சேக்காடு பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதால் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை மூடபட்டுள்ளதால் சேக்காடு, கோபாலபுரம், தென்றல் நகர், கரிமா நகர், ஆவடி, ஆவடி காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிக்குச் செல்லும் சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதே போன்று ஆவடி, பட்டாபிராம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்ல முடியாமலும், மருத்துவ அவசரங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சாலையில் தேங்கிய மழை நீரை ஜேசிபி இயந்திரம் கொண்டு, பாதை ஏற்படுத்தி சுரங்க பாதைக்குள் திருப்பி விட்டுள்ளனர். இதனால் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. சுரங்கப் பாதையை பராமரித்து வரும் ஆவடி மாநகராட்சி நிர்வாகம் பாலத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி போக்குவரத்திற்கு வழிவகை செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.