சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னையில் நேற்று காலை முதலே அடையாறு, கோடம்பாக்கம், கோட்டூர்புரம், தேனாம்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. வேளச்சேரி, அசோக்நகர், மதுரவாயல், வடபழனி போன்ற இடங்களில் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் தேனி, திண்டிவனம், தருமபுரி, பென்னாகரம் என தமிழகத்தின் பல இடங்களில் மழை பொழிந்தது. திருவள்ளூர் அருகே மின்னல் தாக்கி ஒரு பெண் உயிரிழந்தார். காயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.