தமிழ்நாடு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை

webteam

இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவிலும் மழை நீடித்தது. ஆலங்குடி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, அன்னவாசல், விராலிமலை உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், இரவு நேரங்களிலும் மழை பெய்தது. விடாது பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கனமழை பெய்தது. கொள்ளிடம், பூம்புகார், வைத்தீஸ்வரன்கோவில், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. மழை காரணமாக, அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 6 மணி நேரம் பலத்த மழை பெய்தது. ரெட்டியப்பட்டி, நல்லாம்பட்டி, நாகல்நகர், செட்டிநாயக்கன்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், சாலைகள் எங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. தலைஞாயிறு, கோடியக்கரை, தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம், கள்ளிமேடு ஆகிய இடங்களில் பெருமழை பெய்தது.