தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நடுவட்டம் மற்றும் வால்பாறையில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கடலூர், புதுச்சேரி, நாகை, தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோபால்பூர் மற்றும் பூரி இடையே இன்று இரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.