தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை - அதிகபட்சமாக கோடியக்கரையில் 8 செ.மீ மழைப்பதிவு

Sinekadhara

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் எட்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

குமரிக்கடல் பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாங்குடி, திருநெய்பேர், குன்னியூர், நல்லூர், கூடூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்துவருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையினால், பல்வேறு இடங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த கதிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதே வேளையில், பயிறு வகைகள் மற்றும் எள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள், இளம் பருவத்தில் இருப்பதால், தற்போது பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேதாரண்யம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கோடியக்கரை, தலைஞாயிறு வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்துவருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வேதாரண்யத்தில் 7 சென்டி மீட்டர் மழையும், கோடியக்கரையில் 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.