சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் பகுதியில் உள்ள வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிக்கு நகர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சுமார் 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்துக்கு கடற்காற்று வீசக்கூடுமென்பதால், வங்கக்கடல் பகுதியிலும், அந்தமான் நிகோபர் தீவுப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் இதுதொடர்பான அறிவிப்பு சென்னையில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.