ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்துள்ளது.
கன்னியாகுமரி அருகே நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இதற்கு ஒகி புயல் என பெயரிடப்பட்டது. புயலின் காரணமாக மழை மேலும் தீவிரமடைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 45 சென்டி மீட்டரும், மணிமுத்தாறில் 38 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் 22 சென்டி மீட்டரும், மயிலாடியில் 18 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 17.6 சென்டி மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணியில் 17 சென்டி மீட்டரும், மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டம் தென்காசியில் 17 சென்டி மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை, பேச்சிப்பாறை, பூதபாண்டி பகுதிகளில் தலா 16 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணியாச்சியில் 14 சென்டி மீட்டரும், கடம்பூரில் 13 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.