தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழகத்தில் மழை வாய்ப்பு

webteam

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் அடுத்து வரக்கூடிய ஐந்து தினங்களுக்கு மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வரும் 8ஆம் தேதி வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் நிலவக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் நாளை வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.