தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

rajakannan

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல கிழக்குப் பகுதியில், தெற்கு ‌கர்நாடகா முதல் தென்தமிழகம் வரை குறைந்தக் காற்றத் தாழ்வுப் பகுதி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

அதேபோல் தென்தமிழக பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் மேற்குதிசை காற்றும் - கிழக்கு திசை காற்றும் சந்திக்கிறது பகுதி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார். 

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கும்பகோணத்தில் 16 சென்டி மீட்டரும், பாம்பனில் 11 சென்டி மீட்டரும் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட, 48 சதவிகிதம் அதிகம்  பெய்துள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழகத்தில் கோவை, தேனி, நாகை, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை பகுதிகளில் பெய்த பலத்த காற்றுடன் பெய்தக் கனமழை காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்தன. 

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கல்லாற்றுப் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்ததால் பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வடுகபட்டு, ஜெயமங்களம், குள்ளப்புரம் பகுதியில் மக்கள் ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான நீராவி அருவி, முள்ளிக்கடவு ஆறு, வழுக்கு பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நீராவி அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.