தமிழ்நாடு

சென்னையில் இன்று கனமழை பெய்யும்!

webteam

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.  பலத்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. சாலைகள் வெள்ளக்காடாக மாறின. இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று கூறும்போது, ’கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழையும் பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும். பலத்த மழையாகவும் பெய்ய வாய்ப்புள்ளது’ என்றார்.