தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் சில நாட்கள் மட்டும் மழையை கொடுத்தது. பின்னர் அதிகப்படியான நாட்கள் வறண்ட வானிலையே நீடித்த நிலையில், தென்தமிழகம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட ஒரு சில மாவட்டத்தில் கனமழை பெய்தது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சிவகங்கை மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், சிதம்பரத்தில் தலா 8 சென்டிமீட்டர் மழையும், கேளம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் சோழிங்கநல்லூர், காயல்பட்டினம், கடலூரில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.