சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தாம்பரத்தில் முடிச்சூர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீர், வெளியேற வழியின்றி இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியின் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதார சீர்க்கேடு ஏற்படுவதாகவும், இதனை சரிசெய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதே போல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நகர்ப் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதாரச்சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனிடையே சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீரை உடனுக்குடன் வெளியேற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.