தமிழ்நாடு

பூந்தமல்லி: குடியிருப்புப் பகுதியை சூழ்ந்துள்ள தண்ணீர் - மிதவை படகுகளில் பயணிக்கும் அவலம்

webteam
பூந்தமல்லி அருகே குடியிருப்பை சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 5அடிக்கு மேல் தேங்கியுள்ள வெள்ளத்தால் ஆபத்தான முறையில் மிதவையில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை அடுத்த பாரிவாக்கம் ஊராட்சியில் கனமழை பெய்த காரணத்தால் மழைநீருடன் ஏரி நீரும் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். மாருதி நகர், பஜனைகோயில் தெரு, ஜெ.ஜெ நகரை முழுவதுமாக மழை வெள்ளம் ஆக்கிரமித்துள்ளது. மார்பளவு தேங்கியுள்ள மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கையை தொலைத்துள்ள மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததே பாதிப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், மார்பளவு தேங்கி உள்ள மழை வெள்ளத்தில் மிதவைகள் மூலம் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். நீண்ட நாட்கள் மழைநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று ஏற்படும் சூழல் நிலவிவருகிறது. அதுமட்டுமின்றி அட்டை பூச்சி, பூரான் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் நுழைவதால் அச்சம் கொள்கின்றனர்.
இதுகுறித்து பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்புகொண்டு கேட்டபோது, கால்வாய் வழியாகவும் ராட்சத மோட்டார் மூலமும் தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், பூந்தமல்லி ஏரி நிரம்பி பாரிவாக்கம் ஏரிக்கு வருவதால் உபரி நீர் மற்றும் மழை வெள்ளம் கூடுதலாக வருவதால் தண்ணீர் தேங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.