வடதமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமம் காரணமாக வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் நாகைக்கு இடையே 3 கிலோ மீட்டர் உயரத்தில் காற்றின் சங்கமம் உருவாகியுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, வேலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, திருவண்ணாமலை, தருமபுரி, கடலூர், நாகை, அரியலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருச்சியில் அதிகபட்சமாக 13 சென்டி மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தலா 8 சென்டி மீட்டரும், பெரம்பலூரில் 7 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.