தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் தற்போது வரை இயல்பை விட 44 சதவிகிதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் வழக்கமாக 25 சென்டிமீட்டர் மழை பெய்யவேண்டிய நிலையில், 13 சென்டிமீட்டர் அளவுக்கே மழை பதிவாகி உள்ளது.
மாவட்ட வாரியாகவும் வடகிழக்குப் பருவமழை குறைவாகவே பதிவாகி உள்ளதாகவும், சென்னையில் 15% குறைவாகவே மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக சென்னை முதல் நாகை வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நவம்பர் மாத பிற்பகுதியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை, தமிழக கடலோர பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஓட்டப்பிடாரம் , வீரகனூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய இடங்களில் 4 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.