தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களாக தமிழத்தில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. நாளுக்கு நாள் வெப்பமும் அதிகரித்து வருகிறது. இரவு நேரத்தில் குளிரும் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரியின் கடற்கரை பகுதியிலும் லேசான மழை பெய்தது. இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் இருந்து கிழக்கு, வடகிழக்கு, தென் கிழக்கு ஆகிய திசைகளில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்றானது தமிழகம் நோக்கி வீச வாய்ப்புள்ளது. இதனால், இரு தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகப்பட்சமாக தூத்துக்குடி சாத்தான்குளத்தில் 4 செமீ மழையும், ராமநாதபுரம் பாம்பனில் 3 செமீ மழையும், தூத்துக்குடி, திருச்செந்தூரில் தலா 2 செமீ மழையும் பதிவாகியுள்ளது.