தமிழ்நாடு

தமிழகத்தில் வெளுத்து வாங்கியது மழை: இன்றும் தொடரும்

தமிழகத்தில் வெளுத்து வாங்கியது மழை: இன்றும் தொடரும்

webteam

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை இன்றும் தொடர வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர், அருப்புகோட்டை, பாலையம்பட்டி, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, ‌மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன்,பேரையூர், உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 2 மணி நே‌ரமாக இடைவிடாது பெய்த மழையால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில்‌ பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வடக்கு நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மகாபலிபுரத்தில் 10 சென்டி மீட்டரும், செய்யாறில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.