தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
.சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நேற்று வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியில் நிலவி வருவதாகவும், மன்னார் வளைகுடா பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் கூறினார். கடந்த 24மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்திருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். அடுத்த 24மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னையை பொறுத்த வரையில் மாலை நேரத்தில் இடைவெளிவிட்டு மழை பெய்யும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்தார். மேலும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை சென்னையில் சராசரி அளவை விட 93 சதவிகிதம் அதிகமான மழைப்பதிவு ஆகியுள்ளதாகவும் அவர் கூறினார்.மழைப்பதிவு அதிகபட்சமாக நாகை தலைஞாயிறில் 27செ.மீ,நாகை திருப்பூண்டியில் 24செ.மீ,வேதாரண்யம் 16 செ.மீ,திருவாரூர்,திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ,பொன்னேரி 10செ.மீ,நாகப்பட்டினம் 9 செ.மீ,அண்ணா பல்கலை,காரைக்கால்,நுங்கம்பாக்கம் 7 செ.மீ,சென்னை ஏர்போர்ட்,டி.ஜி.பி 6 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.