தமிழ்நாடு

சென்னையில் விடாமல் தொடரும் மழை...! இன்றும் நீடிக்கும்..!

சென்னையில் விடாமல் தொடரும் மழை...! இன்றும் நீடிக்கும்..!

Rasus

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அத்துடன் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை நேற்று முன் தினம் விட்டு விட்டு பெய்த மழை, நேற்று விடாமல் தொடர்ச்சியாக பெய்தது. இருப்பினும் கனமழை பெய்யவில்லை. சென்னையில் நேற்று முழுக்கவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்து வருகிறது.

வேளச்சேரி, கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இந்தாண்டு இதுவரை மழைப்பொழிவு குறைவாகவே இருந்துள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை இன்னும் பெய்தால் தான் அடுத்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் பொதுமக்கள் கருதுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம், தாமரைப்பாக்கம், செங்குன்றம், திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, சேவூர், களம்பூர், வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. நெல்லை மாநகர் மற்றும் தென்காசி பகுதிகளில் கன மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. திருச்சி , தருமபுரி‌‌ ஈரோடு‌ உள்ளிட்‌ மாவட்டங்களிலும் பரவலாக ‌‌மழை‌ பெய்து வருகிறது.