ஏரிகள் உடையும் என்பது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம், மக்களும் அதனை நம்ப வேண்டாம் என்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
மழை, வெள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பருவமழை பாதிப்பு தொடர்பாக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல என்று கூறினார்.
மேலும் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், “செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவில் 15 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளது. ஏரிகளுக்கு தற்போது தான் நீர் வந்துகொண்டிருக்கிறது. ஏரிகள் பாதுகாப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மீதும், தமிழக அரசு மீது நம்பிக்கை வையுங்கள். கடந்த கால அனுபவங்களில் இருந்து மழை வெள்ளத்தால் பாதிப்படைய வாய்ப்புள்ள 4500 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு நிவாரண முகாம்கள் மற்றும் மற்றும் மீட்புக் குழுக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறு, பெரிய நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன” என்று கூறினார்.