தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்மேற்குப் பருவக்காற்று வலுவடைந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் கனமழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேற்கு மஹாராஷ்டிரா வெள்ளக்காடாக மாறியுள்ளது. அங்கு 27 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி தவித்த 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதை அடுத்து வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 40 பேர் வரை நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.