தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

webteam

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கடலோரத் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்படும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய தென்மேற்கு அரபிக் கடலில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கேரளா, கர்நாடகா மற்றும் தென் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்றிரவு சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகை, திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.