வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திகளை அடுத்தடுத்து பார்க்கலாம்...
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல், வடதமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தற்போது 10 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னைக்கு 560 கிலோ மீட்டர் தூரத்திலும் டித்வா புயல் நிலைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி அதிகாலையில், டித்வா புயல் வடதமிழகம், அதனையொட்டி உள்ள வடக்கு ஆந்திரா பகுதியை அடையக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் மிக கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
தமிழ்நாட்டின் 6 மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும், அதி கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களிலும், மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர், இயற்கை இடர்பாடுகளின்போது ஏற்படும் பாதிப்புகளை பெருமளவு குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து எடுத்து வருவதாகவும், அது அப்படியே தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பேரிடர் மேலாண்மைக்கு தேவையான நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து அதை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். வரும் 29, 30ஆம் தேதிகளில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக, தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன்காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், நாகை, காரைக்கால், பாம்பன், துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்பட்டுள்ளது. இதுதவிர சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் நிலையில், கடலுக்கு சென்ற மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதை அடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தனுஷ்கோடி, ராமேஸ்வரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், மழை பெய்தது. பாம்பன் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசிவருகிறது. சூறைக்காற்றால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பாம்பன் பாலத்தில் ஓட்டுவது சிரமமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தொடர் கடல் சீற்றம் காரணமாக வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நாட்டுப் படகுகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
காரைக்காலில் கனமழை பாதிப்புகள் தொடர்பாக புகராளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக சார்பில் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள டித்வா புயல் காரணமாக காரைக்காலில் மிக கனமழைக்கான சிவப்பு மற்றும் அதி தீவிர மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காரைக்காலில் உள்ள பொதுமக்கள் எச்சரிகையுடனும் பாதுகாப்புடனும் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து அரசு துறை அலுவலர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். மரம் அறுக்கும் இயந்திரங்கள், நீர் வெளியேற்றும் மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை பாதிப்புகள் தொடர்பாக புகாரளிக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.