தம்ப்ஸ் அப் எமோஜி
தம்ப்ஸ் அப் எமோஜி  முகநூல்
தமிழ்நாடு

‘தம்ஸ் அப்’ காட்டியதால் பறிபோன வேலை... தட்டிக்கேட்ட நீதிமன்றம்! நடந்தது என்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

எமோஜி... நிகழ்கால ட்ரெண்டிங் குறியீடு என்று சொன்னால் மிகையில்லை. பல வரிகளில் நாம் கூற நினைக்கும் கருத்தினை ஒரேயொரு எமோஜி மூலம் எளிதாக கூறிவிடலாம். அந்த அளவுக்கு User Friendly-யும்கூட!

ஆனால், எமோஜியின் அர்த்தத்தை தவறாக எடுத்து கொள்பவர்களும் உண்டு. அப்படிதான், தம்ஸ் அப் எமோஜி காண்பித்த ஒருவருக்கு வேலையே பறிபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு உதவி கமாண்டர் ஒருவர் 2017 ஆம் ஆண்டு காவலர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த செய்தியை ரயில்வே பாதுகாப்பு படை வாட்சப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த செய்தியை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் நரேந்திர சவுகான் என்பவர் தம்ஸ் அப் காட்டியுள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக இவருக்கு அலுவலகம் சார்பில் மெமோ அனுப்பப்பட்டுள்ளது. அதில், இவர் தம்ஸ் அப் காட்டியது ரயில்வே அதிகாரி கொலை செய்ததை கொண்டாடும் வகையில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுகான் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க, ஒழுங்கு நடத்தை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனை விசாரித்த தனி நீதிபதி, இவரின் பணி நீக்கத்தினை ரத்து செய்தார். ஆனால் இதை ஏற்காத ரயில்வே பாதுகாப்பு படை டிஜிபி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் கொண்ட அமர்வு, இது குறித்து தெரிவிக்கையில், ”குரூப்பில் வந்த செய்தியை பார்த்து விட்டேன் என்பதை உறுதி செய்யதான் தம்ஸ் அப் காட்டினேன் என்று மனுதாரர் விளக்கம் அளித்தது ஏற்புடையதுதான். ஆகவே இவரை பணி நீக்கம் செய்ய முடியாது. மேலும் ,தனிநீதிபதி அளித்த தீர்ப்பு சரிதான்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.