வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் வளையாம்பட்டு ரயில்வே கேட் அருகே, சென்னை மார்க்கத்தில் செல்லும் தண்டவாளத்தில் விரிசல் இருப்பது இன்று காலை தெரியவந்தது. இதனையடுத்து ஏலகிரி, யஷ்வந்த்பூர், திருவனந்தபுரம் விரைவு ரயில்களும், அரக்கோணம் பயணிகள் ரயிலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஜோலார்பேட்டை கோட்ட உதவி பொறியாளர் அபிஷேக் வர்மா தலைமையில் 20-க்கும் அதிகமான ஊழியர்கள் விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தற்காலிகமாக விரிசல் சரி செய்யப்பட்டு அந்த தடத்தில் 5 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இன்று மாலைக்குள் 13 கிலோ மீட்டர் தொலைவு தண்டவாளம் மாற்றப்படும் என்றும் அதன் பின்னரே ரயில்கள் வழக்கமான வேகத்தில் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.