தமிழ்நாடு

ரயில்வே கேட் பழுது: கூடுவாஞ்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல்

kaleelrahman

ரயில்வே கேட் பழுதால் கூடுவாஞ்சேரி முதல் சிங்கபெருமாள் கோயில் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து இரண்டு மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவசரமாக செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் நெரிசலில் சிக்கி உரிய நேரத்தில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்த காட்சியை காணமுடிந்தது.

மேலும் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்புபவர்கள், இருசக்கர வாகனத்திலும், மாநகர பேருந்திலும் செல்பவர்கள் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள், கார்கள் என அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆமை வேகத்தில் நகர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் உரிய நேரத்தில் செல்லமுடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

சிங்கப்பெருமாள் கோவில் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ரயில்வே பாலம் பணி கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் காலை மற்றும் மாலை நேரங்களில் இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆறு மாதத்துக்கு முன்பு இந்த பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணி தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசலை குறைக்க விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.