சென்னையில் மின்சார ரயிலில் படியில் பயணம் செய்யும் மாணவர்களின் சலுகை அட்டையை ரத்து செய்ய ரயில்வே பாதுகாப்புப் படை முடிவு செய்துள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையின் சென்னை கோட்ட பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, சென்னை புறநகர் ரயில்களில் படியில் பயணம் செய்வதைத் தடுக்கும் வகையில் படியில் பயணம் செய்பவர்களை வீடியோ, புகைப்படம் எடுத்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை ஏற்கனவே திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலும் தொடங்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
படியில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்களின் வீடியோவை கல்லூரிக்கு அனுப்பி கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார். தொடர்ந்து படியில் பயணம் செய்வோரைக் கண்காணிக்க 8 சிறப்பு படைகள் அமைக்கபட்டுள்ளதாகவும், அவர்கள் சாதாரண உடை அணிந்து படியில் பயணம் செய்பவர்களை வீடியோ எடுத்து, சலுகை அட்டை வைத்திருந்தால், அதை ரத்து செய்ய தென்னக ரயில்வேக்கு பரிந்துரைப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.